அருணகிரிநாதர் சுவாமி

அருணகிரிநாதர் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 16000 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-இக்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது.


அருணகிரிநாதர் வரலாறு

அருணகிரிநாதர் 1370-ல் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவர் பிறந்து சில தினங்களிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் நடந்தது. ஆனாலும், அருணகிரிநாதர் தீய பழக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார் என்றும், தனது இளமைக்காலத்தை மோசமான வாழ்க்கையாகத் தொடர்ந்ததாகவும், அவரது சகோதரி எப்போதுமே தனது சகோதரரை மகிழ்விக்க தான் சம்பாதித்த அனைத்தையும் கொடுத்தார் எனவும் புராணக்கதைகள் கூறுகின்றன. எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து அவதிப்பட்டார். என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட்டதால், கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். அதனால் இவரது சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடன் கடிந்து கொண்டபோது, தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார். அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், அவரது தொழுநோயைக் குணப்படுத்தினார், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.

பாம்பன் குமரகுருதாச
சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1848-50 - மே 30, 1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்து வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தம் பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம், குமாரஸ்தவம் போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

பழந்தமிழ்க் குடியான அகமுடையார் இனத்தில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாகத் தோராயமாக 1848-50 ஆம் ஆண்டு இராமேசுவரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866-ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்த சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் ஆறெழுத்து (சரவணபவ) உபதேசம் பெற்றார். அவரது ஆணையின்படி வடமொழியும் கற்கலானார். பின் அம்மொழியிலும் புலமை பெற்றார். தமது 12, 13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக "கங்கையைச் சடையில் பரித்து" எனத் மங்கலத் தொடரால் தொடங்கியது. அருணகிரிநாதரை மானசீக ஞானகுருவாகவும் அருட்சாட்சியாகவும் கொண்ட இவர் தமது ஒவ்வொரு பதிகத்தையும் அருணகிரிநாதர் பெயரை வைத்தே முடிக்கலானார். பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.[2] இவருக்கு அகவை 25-ஐ எட்டிய பொழுது மதுரை சின்ன கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878-ஆம் ஆண்டு வைகாசித் திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர். 1894-ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் உள்ள ஒரு சுடுகாட்டில் சதுரக்குழி வெட்டி அதில் இறங்கி தவம் மேற்கொண்டார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப்பெருமானே இரு முனிவர்களுடன் வந்து உபதேசம் நல்கினார். இவர் முருகப் பெருமானைக் கனவிலும் நனவிலும் காணும் பேறு பெற்றவர் ஆவார். துறவுநெறி மேற்கொண்டு தாம் வாழ்ந்த ஊரான பாம்பினை விட்டு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து பல தலங்களுக்குச் சமயப்பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய திரு.வி.க இவ்வாறு கூறுவார்: "குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துகளைத் தமிழில் விளக்குவார். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவார்" திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்பு பக்கம் 127. 1923-ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் அரசு பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளுக்கு வயது 73 இருக்கலாம். ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறிக் கைவிடப்பட்டார். பாம்பன் சுவாமிகளின் பிரதான சீடரான ஸ்ரீ சுப்பிரமணியதாசரும், சிவசங்கர் தம்பிரானும், ஞானசாகர முதலியாரும் அவரவர் இல்லங்களில் இருந்து சுவாமிகளின் கால்முரிவு சரியாக வேண்டும் என்று சண்முக கவசத்தை தொடர்ந்து நெக்குருகப் பாடிவந்தார்கள். இவர்களில், சுப்பிரமணிய தாசர் பாடி வந்த ஒவ்வொரு சமயத்திலும், ஏரகத் தேவன் என்றாள் இருமுழங்காலும் காக்க என்ற வரிகளைக் சொல்லும் போது பாம்பன் சுவாமிகளின் கால்களை மூன்று வேல்கள் தாங்கிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டார். இதனைச் சுவாமிகளிடத்தில் கூறி மகிழ்ந்தார். பாம்பன் சுவாமிகள் மருத்துவமனையில் இருந்த பதினொராவது நாள், இரண்டு மயில்கள் ஆகாய வெளியில் நடனமிடும் அற்புதக் காட்சியைக் கண்டார். அதன்பின்பு மற்றொரு நாள் செந்நிற குழந்தைவடிவில் முருகப் பெருமான் தமது அருகில் படுத்துக் கொண்டிருந்தக் காட்சியையும் கண்டார். இந்த அருள் நிகழ்ச்சிகளுக்கு பின் பாம்பன் சுவாமிகள் கால்முரிவு குணமாகி பூரணநலம் பெற்றார். பாம்பன் சுவாமிகள் மயில்களின் திருநடனத்தைக் கண்ட காட்சியையே மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை அரசு மருத்துவமனையில் (இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை) "மன்றோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படம் மாட்டப்பட்டும் இந்த அற்புத நிகழ்ச்சியைப் பற்றிய பதிவுக்கல்லும் இருந்தன. இவைகளை அங்குள்ள நோயாளிகளால் வழிபடப்பட்டும் வந்தனர். ஆனால், 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு மருத்துவமனையைப் புதுப்பிப்பதற்காக இந்த மன்றோ வார்டு கட்டிடத்தை முழுவதுமாக இடித்துவிட்டது வருத்தத்திற்கு உரியதாகும். புதியகட்டிடம் கட்டி முடித்தப் பின் மீண்டும், பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படத்தையும், பதிவுக் கல்லையும் அவ்விடத்திலேயே வைத்துவிட வேண்டும் என்பதே பாம்பன் சுவாமிகளின் அடியார்களின் கோரிக்கையாக உள்ளது. 1926-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார். மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சென்னை ஜார்ஜ்டவுன் பகுதியில் உள்ள நம்புல் ஐயர் தெருவின் 39வது எண்ணுள்ள வீட்டில் யாவரும் அறியவே தமது சுவாசத்தை உள்ளுக்குள் இழுத்து முருகப்பெருமானுடன் சுத்த அத்துவித முத்தி அடைந்தார்கள். அடுத்த நாளான, 31.05.1929-ஆம் நாளன்று பாம்பன் சுவாமிகள் சீடர்களால் திருவான்மியூரில் சமாதிக் கோயில் அமைக்கப்பட்டது.

சிறுவாபுரி
முருகன் கோவில்

சிறுவாபுரி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.ஐந்து நிலை ராஜகோபுரம் உடைய இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவர். அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாடிய இக்கோவில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஆகும். இக்கோவில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

குமரன்குன்றம்
பாலசுப்ரமணியர் கோயில்

குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குமரன்குன்றத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் "குமரன் குன்றம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவர் சுவாமிநாத சுவாமி என்றும் பாலசுப்ரமணியர் என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் கோயில் குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில் என்றும், குமரன்குன்றம் சுவாமிநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் தக்சன சுவாமிமலை எனவும் அழைக்கப்படுகிறது.மூலவர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். குன்று இருந்த இடத்தினைக் கண்டு காஞ்சிப்பெரியவர் சந்திரசேகர சரசுவதி இக்குன்றில் முருகன் கோயில் அமையும் என்றார். அவ்வாறே சில பக்தர்கள் குன்றை சீர்படுத்திய போது வேல் கிடைத்தது. அதனை வைத்து வழிபாடு செய்தனர். மூலவருக்கு சுவாமிநாதன் என்று பெயரிட்டுள்ளனர்.

குமரகோட்டம்
சுப்பிரமணியர் கோயில்

காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில் (குமரகோட்டம்) புராணப் பெயர் செனாதீச்வரம் என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும். கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். (கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது.) மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இத்தலத்தின் நுழைவாயிலில் காட்சிதரும் விநாயகப் பெருமானின் பேர்ருவத்தை தரிசித்து ஆசிபெற்ற பின்பு ஆலயத்திற்குள் செல்கின்றனர். மூலவர் சுப்ரமண்ய சுவாமி ருத்ராட்ச மாலையுடனும், கையில் கமண்டலமும் கொண்டு தரிசனம் தருகிறார். இடப்புறமும், வலப்புறமும் வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். அனந்தசுப்ரமண்யர் என்கிற நாகசுப்ரமண்யரின் உலாத் திருமேனி இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமாகும். மேலும், இவரது வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையும் கொண்ட எழில் தோற்றத்துடன் உள்ளது. நாகசுப்ரமண்யரின் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் நின்றுள்ளதோடு, வள்ளி-தெய்வானை உலாத் திருமேனிகளுக்கு மூன்று தலை நாகம் குடை பிடிப்பது போலும் காட்சிதருகிறது. மேலும், சந்தான கணபதி திருவுருவமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.

திருப்போரூர்
முருகன் கோவில்

திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் "புனிதப் போரின் இடம்" என்பது ஆகும். கந்த புராணக் கூற்றுப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது. பின்பு பல நாட்களாக இத்தலம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில் கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்து முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.